ஈரான் தூதரகத்துக்கு தீ வைப்பு: போராட்டக்காரர்களுக்கு ஈராக் அரசு கண்டனம்

ஈராக் நாட்டின் உள் விவகாரங்களில் ஈரான் தலையிடுகிறது எனக் கூறி போராட்டக்காரர்கள் ஈரான் தூதரகங்களைத் தாக்குகின்றனர்.


நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை நஜாஃப் நகரில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு ஒரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் ஈரான் தூதரகம் முன் நின்று ஈரான் ஈராக்கை விட்டு வேளியேற வேண்டும் எனக் முழக்கமிட்டனர். திடீரென ஈரான் தூதரகக் கட்டிடத்துக்கு தீ வைத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த போலீசாரையும மீறிச் சென்று கட்டித்தில் தீ வைத்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்த மாதம் இரண்டாவது முறையாக ஈராக்கில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலமான கர்பாலாவில் இருக்கும் தூதரகம் தாக்கப்பட்டது.


ஈராக் போராட்டத்தில் அந்நாட்டின் அரசின் பக்கம் ஆதரவு அளிக்கிறது ஈரான். இதனால், புதன்கிழமை ஈரான் தூதரகம் தீ வைக்கப்பட்டதற்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் ஈராக் அரசின் நிலைப்பாடு அல்ல என்றும் ஈராக்கில் பிற நாடுகளின் தூதரக உறவு ஊக்குவிக்கப்படுகிறது என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக ஈராக்கில் நடைபெறும் தொடர் போராட்டத்தில் சுமார் 344 பேர் கொல்லப்பட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் மக்கள் அரசில் நடைபெறும் ஊழல்களைக் கண்டித்தும் வேலை வாய்ப்பு மற்றும் பொதுச் சேவையை மேம்படுத்த வலியுறுத்தியும் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் ஈராக்கின் தெற்குப் பகுதியும் தலைநகர் பாக்தாத்தும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன